Sunday 17 June 2012

கார் பூலிங்


‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும் முறையே இவ்வாறு குறிப்பிடப்படுகிற‌து. மேலைநாட்டில் பிரபலமாகி நம் நாட்டிலும் அறிமுகமாகியிருக்கும் கருத்தாக்கம் இது.
கார் போன்ற வாகங்களை சொந்தமாகவோ வாடகைக்கோ பயன்ப‌டுத்துபவர்கள் அதில் தனியே பயணிக்காமல் தன்னோடு விருப்பமுள்ளவர்களை பயணிக்க செய்து பயணச் செல‌வை அவரோடு பகிர்ந்து கொள்வதே கார் பூலிங்கின் அடிப்படை.
இதில் இரண்டு விதமான பலன்கள் உள்ளன். ஒன்று, சுற்றுசுழல் நோக்கில் பார்த்தால் ஒரு காரில் ஒருவர் மட்டுமே பயணிப்பது என்பது கிட்டத்தட்ட பஞ்சமா பாதகத்தில் ஒன்று தான்.எனவே அதில் மற்றவ‌ர்களையும் அழைத்து செல்லும் போது காரில் உள்ள இடப்பரப்பு மற்றும் அதன் ஆற்றல் முழுவதும் பயன்ப‌டுத்தப்படுகிறது. அதே நேரத்தில் காரில் செல்ல முடியாமல் இருக்கும் மற்றவர்கள் இதன் மூலம் தங்கள் இருப்பிடத்தை எளிதாக சென்றடையலாம்.
எங்காவது போகும் போது நண்பர்களை வழியில் பார்த்தால ஏற்றிசெல்வது உண்டல்லவா, அது போலவே காரில் காலியாக உள்ள இருக்கைகளில் நாம் செல்லும் இடத்திற்கு செல்பவர்களுக்கு இடம் அளித்து அழைத்து செல்வதால் பணம் மிச்சம்.. அவரது நட்பு லாபம்.
கார் பூலிங் அடிப்படையில் நம்மூர் ஷேர் ஆட்டோ சேவையை போல தான். ஆனால் ஷேர் ஆட்டோவில் பலர் ஒரே வாகனத்தில் பயணிக்கிறோம்..குறிப்பிட்ட கட்டணத்தை தருகிறோம். இதில் நம்முடைய திட்டமிடல் எதுவும் கிடையாது.ஆனால் கார் பூலிங்கில் அப்படி இல்லை.முன் கூட்டியே நமக்கான வழித்துணைகளை தேடிக்கொள்ளலாம்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்களும் சரி, கார் அல்லது டாக்சியை வாடகைக்கு எடுத்து கொள்பவர்களும் சரி இப்படி கார் பூலிங் செய்து கொள்ளலாம்.
இப்படி பயணங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பவர்களிடையே தொடர்பு ஏற்படுத்தித் தருவத‌ற்கென்றே இணையதளங்கள் இருக்கின்றன.
அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இவை மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தியாவிலும் கூட கார் பூலிங் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியாவில் இந்த கருத்தாக்கம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற‌வில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த முறை புதுமையானதாக பயனுள்ளதாக இருந்தாலும், முன் பின் அறிமுகம் இல்லாதவர்களோடு வாகனத்தை பகிர்ந்து கொள்ள பலருக்கும் உள்ள தயக்கமே இதற்கு முக்கிய காரண‌ம்.
கார் பூலிங் சேவைகளில் உறுப்பினர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள தேவையான அம்சங்கள் இருந்தாலும் கூட இந்த தயக்கம் பலருக்கு இருக்கவே செய்கிற‌து.
ஆனால் ஃபேஸ்புக் யுகத்தில் இந்த தயக்கத்தை வெற்றி கொள்ளவும் வழி இருக்கிறது.அதாவது ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் பயணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.வழித்துணைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
மும்பையில் அறிமுகமாகியிருக்கும் ‘ஸ்மார்ட் மும்பைகர்’ இதற்கான சேவையை அறிமுகம் செய்துள்ளது.
அறிமுகம் இல்லாதவர்களோடு காரில் சேர்ந்து பயணிக்கும் போது தானே தயக்கமும் பயமும் ஏற்படுகிறது. அதற்கு பதிலாக ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களோடு சேர்ந்து பயணிக்கலாம் தானே.
சினிமா, சுற்றுலா போன்றவற்றுக்காக ஃபேஸ்புக் மூலம் நண்பர்களோடு சேர்ந்து திட்டமிடுவது போல, தினசரி பயணங்களையும் ஃபேஸ்புக் மூலமே திட்டமிட்டு கார் பூலிங்கிற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ளலாம்.
அலுவலகம் செல்பவர்கள் தங்கள் திட்டத்தை இந்த தளம் வழியே ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். அதே வழியில் செல்லும் நண்பர்கள் இதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்கள் சேர்ந்து பயணிக்கலாம். பயணச் செலவை பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களின் நண்பர்களையும் இந்த வலைப்பின்னலில் சேர்த்து கொள்ளலாம்.
தனியே தினமும் ஆட்டோவிலோ கால் டாக்சியிலே செல்வது சாத்தியம் இல்லை.ஆனால் உடன் நண்பர்களை சேர்த்து கொண்டால் செலவை பகிர்ந்து கொண்டு தினமும் பஸ் ரெயில் நெரிசலில் சிக்காமல் காரிலோ ஆட்டோவிலோ போய் வரலாம் தானே!
எல்லோரும் அறிந்திருப்பது போல பெரும்பாலான கார்கள் மற்றும் ஆட்டோக்கள் அதன் முழு அளவுடன் செல்லாமல் ஒரே ஒரு பயணியுடனே செல்கின்றன. கார் பூலிங் செய்வதன் மூலம் இந்த விரய‌த்தை தவிர்ப்பதோடு எல்லோரும் பயன் பெறலாம் இல்லையா?அதோடு கார் வைத்திருப்பவர்கள் கூட்டாக பயணம் செய்தால் ஒரளவு போக்குவர்த்து நெரிசலையும் குறைக்கலாம்.
மும்பைவாசிகளை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை இது. விரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படலாம். நம்ம சென்னைக்காக இதே போன்ற‌ சேவையும் துவக்கப்படலாம்.
பெட்ரோல் விலை பரம்பத விளையாட்டாய் இருக்கும் நிலையில் ( நிறைய்ய்ய்ய ஏற்றி.. கொஞ்ச்ச்ச்ச்சம் குறைத்து ) இந்த வகையான கூட்டு பயணங்களே நமக்கு ஏற்றது.
இணையதள முகவரி: http://smartmumbaikar.com/
————

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment